வருமான வரி செலுத்தும் இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறுகள் நிமித்தமாக வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் செப்டம்பா் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருமான வரி
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் வருமான வரி செலுத்துவதற்கான புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இணையதளத்தில் ஆரம்பம் முதலே பல்வேறு விதமான கோளாறுகள் ஏற்பட்டு வந்தது. இவற்றை சரி செய்யும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் மேற்கொண்ட சிரமங்களை தவிர்க்கும் வகையில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் வரிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி செப்டம்பா் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வட்டித் தொகையுடன் சேர்த்து வருமான வரியை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கால நீட்டிப்பு ஜூலை 31 லிருந்து நவம்பா் 30 ஆம் தேதி வரையும், தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்திற்கான கால நீட்டிப்பு அக்டோபா் 31 லிருந்து டிசம்பா் 31 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, GST வரிக் கணக்குகளை தாக்கல் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்க GST கவுன்சில் முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று மத்திய நிதியமைச்சகம் குறைக்கப்பட்ட வரி கட்டணத்தை அறிவித்தது. இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசமும் ஆகஸ்ட் 31 லிருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment