இந்த கல்வி ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 227 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம்! - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/08/2021

இந்த கல்வி ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 227 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம்!

 இந்த கல்வி ஆண்டில் 227 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பொறியியல் கல்லூரிகளும், இதரபல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் வரையறை, தேர்வு நடத்துவது உள்ளிட்ட கல்விப் பணிகளை பல்கலைக்கழக விதிமுறைகளின்படி இக்கல்லூரிகள் மேற்கொள்ளும். ஆனால், தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மேற்கண்ட பணிகளை சுயமாகவே மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தவை.


அதேபோல, புதிதாக தன்னாட்சி அங்கீகாரம் பெற விரும்பும் தனியார் கல்லூரிகள், பல்கலை. வழியாக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, யுஜிசியின் 6 பேர் கொண்ட வல்லுநர் குழுவுடன் பல்கலை. அல்லது உயர்கல்வித் துறை சார்பில் மாநில பிரதிநிதி ஒருவரை இணைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியில் ஆய்வு நடத்தப்படும்.

தன்னாட்சி அங்கீகாரம் பெற விரும்பும் கல்லூரிகள் தொடங்கி குறைந்தது 10 ஆண்டுகளாவது செயல்பட்டு வரவேண்டும். அதேபோல, 4 ஆண்டு அனுபவம் உள்ள பேராசிரியர்கள், கல்லூரியின் வசதிகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக ‘நாக்’ அமைப்பிடம் ‘ஏ’ சான்று பெற்றிருக்கவேண்டும். தன்னாட்சிக்காக விண்ணப்பித்த பிறகு, 5 ஆண்டுகளுக்கு தேர்ச்சிவீதம், மாணவர் சேர்க்கை 60 சதவீதத்துக்கு குறையக் கூடாது என்பதுபோல பல விதிமுறைகள் உள்ளன. தகுதியான கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படும். அந்த கால அளவு முடிந்த பிறகு, மீண்டும்அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்படி, 2018-19 கல்வி ஆண்டில் தமிழகத்தில் 160 தன்னாட்சிக்கல்லூரிகளே இருந்தன. இந்நிலையில், 2021-22 கல்வியாண்டில் தமிழகத்தில் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘2019-ல் தமிழகத்தில் 52 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இந்தகல்வி ஆண்டில் அது 75 ஆகஉயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, பாரதியார் பல்கலைக்கழக இணைப்பில் 30, மதுரை காமராஜர் பல்கலை.யில் 27, பாரதிதாசன் பல்கலை.யில் 26, சென்னை பல்கலை.யில் 24 என மொத்தம் 227 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரத்தை யுஜிசி வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 119, ஆந்திராவில் 116 என நாடு முழுவதும் 832 கல்லூரிகளுக்கு இந்த ஆண்டில் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

இதுதொடர்பாக கல்வியாளர் ஆர்.அஸ்வின் கூறியதாவது:

தன்னாட்சி கல்லூரிகளில் படித்தால் சுலபமாக தேர்ச்சி பெறலாம், விரைவில் வேலை கிடைக்கும் என்றுபெற்றோர், மாணவர்கள் கருதுகின்றனர். இதனாலேயே, மற்ற கல்லூரிகளைவிட தன்னாட்சி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகம்நடக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில்தனியார் கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை சரிவை சந்தித்தாலும், தன்னாட்சி கல்லூரிகளில் மாணவர்சேர்க்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, பல்கலை.இணைப்பு பெறுவதைவிட தன்னாட்சி அங்கீகாரம் பெறவே தனியார் கல்லூரிகள் விரும்புகின்றன.

தற்போது கரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் ஆய்வுக்குழுவினர் நேரடி ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை. இதனால், ‘நாக்’ அமைப்பில் ‘ஏ’ சான்று பெற்ற கல்லூரிகள் தரும் தரவுகளை வைத்து தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தவறான வழிமுறை. தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகளை மேலும் வலுப்படுத்தி, நேர்மையாகவும், கண்டிப்புடனும் ஆய்வுநடத்தப்படவேண்டும். அப்போதுதான் தகுதியான கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். தவிர, தன்னாட்சி கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமானால், பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சியை சந்திப்பதோடு, கல்வித் தரமும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459