மாணவர்கள் மொபைலிலேயே மூழ்கி இருப்பதால் கோப மனநிலை, தற்கொலை முயற்சிக்கு ஆளாகின்றனர் : நீதிபதிகள் வேதனை!! - ஆசிரியர் மலர்

Latest

 




01/07/2021

மாணவர்கள் மொபைலிலேயே மூழ்கி இருப்பதால் கோப மனநிலை, தற்கொலை முயற்சிக்கு ஆளாகின்றனர் : நீதிபதிகள் வேதனை!!

  

மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமை ஆகாமல் ஒன்றிய, மாநில அரசுகளால் தான் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், மடிக்கணினி, கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை தடைச் செய்ய கோரி மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தைகளும் இளம் பருவத்திணரும் மாணவர்களும் ஆன்லைன் விளையாட்டுகளில் வரும் கதாபாத்திரங்களாக மாறி வருவதுடன் வன்முறை எண்ணங்களுக்கும் ஆளாவதாக வாதிட்டார்.


அப்போது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களில் பலர் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிடுவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். படிப்பு மற்றும் விளையாட்டுபோன்ற காரணங்களுக்காக அதிகளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள் அதிகப்படியான கோப மனநிலைக்கும் தற்கொலை முயற்சிக்கும் ஆளாவதாக தெரிவித்த நீதிபதிகள், மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் அரசுகள் தான் தடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.பெற்றோர் மற்றும் பெரியோரிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்துவருவதாக கவலை தெரிவித்ததுடன் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.பின்னர் வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை விசாரணையை தள்ளிவைத்தனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459