மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/07/2021

மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம்

 சென்னை,


எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22-ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்தது. ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


அவகாசம்


இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் 2021-22 கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்த மத்திய அரசின் நிலையை ஒரு வாரத்துக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459