மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள , அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது.
பெயர்ப்பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும் , திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட , சில பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது , மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளக்கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரிய வருகிறது.
எனவே , தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியல்களில் தேர்வர்களது தலைப்பெழுத்து , பெயர் , ( ஆங்கிலம் / தமிழ் ) பிறந்த தேதி , புகைப்படம் , பயிற்று மொழி ( Medium ) , மொழிப்பாடம் ( First Language ) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும் , பள்ளியின் பெயரில் ( ஆங்கிலம் | தமிழ் ) திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியாக பலமுறை மாணவர்களது பெயர்பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும் , மதிப்பெண் சான்றிதழ் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது ஒரு நிகழ்வாக உள்ளது. இது பல சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே , முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன் முக்கியத்துவத்தை தலைமையாசிரியர்களுக்கு உணர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கோ அல்லது அரசுத் தேர்வுகள் இயக்கககத்திற்கோ கடிதங்கள் அனுப்பி இருப்பினும் , மீளவும் பள்ளித் தலைமையாசிரியர்கள் பெயர்ப் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களின் விவரங்களை ( மாணவர்களின் தேர்வெண்ணுடன் ) , தெளிவாக பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் 28.07.2021 - க்குள் ஒப்படைக்க வேண்டும் . முதன்மைக் கல்வி அலுவலர்கள் 29.07.2021 பிற்பகல் முதல் 31.07.2021 ஆகிய நாட்களில் அரசுத் தேர்வுத் துறை இணையதளத்தில் தங்களுக்கான User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலை பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட திருத்தங்களை பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . தேர்வர்களது நலன் கருதி , பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட்ட பிறகு , சான்றிதழில் திருத்தம் செய்யக் கோரி இவ்வலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்புதல் கூடாது . எனவே , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இப்பொருள் குறித்து விரைந்து சுற்றறிக்கை அனுப்புமாறும் , இப்பணிக்கு அதிமுக்கியத்துவம் அளித்து , உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment