கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டு இடங்களில் புகார் இருந்தால் தெரிவிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.
அதற்காக 2021- 22ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான சேர்க்கை நடைமுறைகள் ஜூன் 24ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பிப்பது அவசியம்.
பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10 அன்று குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.
இந்நிலையில் இந்த நடைமுறையில் ஏதேனும் புகார் இருந்தால் தெரிவிக்கலாம் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’இது சார்ந்து பெற்றோரின் புகார் அல்லது ஆலோசனைகளை வழங்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அழைக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மாநில அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் அல்லது தொடக்கக் கல்வி இயக்குநரிடம் தெரிவிக்கலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment