தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சேர்க்கை கலந்தாய்வில் மொத்த இடங்களை உறுதி செய்வதில் சிக்கல் நிலவுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் தமிழகத்தில் இருந்து 529 பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளன.
இதற்கிடையே, கடந்த ஆண்டில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாத 16 பொறியியல் கல்லூரிகள், நடப்புகல்வி ஆண்டில் (2021-22) சேர்க்கை வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. அதன்படி, ஏஐசிடிஇ சேர்க்கை அங்கீகாரம் பெறும்கல்லூரிகளில் உள்ள இடங்களை பொருத்துதான், அரசு ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான இடங்கள் உறுதி செய்யப்படும்.
இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக, விண்ணப்ப பதிவு தொடங்கும்போது, கல்லூரிகள் மற்றும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும். ஆனால், தற்போது கலந்தாய்வில் கலந்து கொள்ளும் கல்லூரிகளின் பட்டியல், மொத்தஇடங்கள் எத்தனை என்பது குறித்த விவரங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இன்னும் வெளியிடவில்லை.
இந்நிலையில், 200-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇஅங்கீகாரம் கிடைப்பதில் தாமதம்ஏற்படுவதால், சேர்க்கை கலந்தாய்வில் மொத்த இடங்கள் உறுதி செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உயர்கல்வித் துறைஅதிகாரிகள் கூறும்போது, ‘‘சேர்க்கைக்காக ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறதமிழகத்தில் இருந்து 5 புதிய கல்லூரிகள் உட்பட 529 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. கடந்த ஆண்டில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட சேர்க்கை விகிதம் பெற்ற 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், புதிய பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், 250 கல்லூரிகளுக்கு மட்டுமே தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால், மற்றகல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அங்கீகாரம் வழங்கஆகஸ்ட் 10 வரை அவகாசம் உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சுமார் 50 கல்லூரிகளில் போதிய வசதி இல்லாததால், சேர்க்கை விண்ணப்பம் தள்ளுபடி செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ஏஐசிடிஇ அங்கீகாரம் வழங்கும் பணி முடிந்த பின்னர், தமிழக பொறியியல் சேர்க்கை கலந்தாய்வில் உள்ள கல்லூரிகள், இடங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’’ என்றனர்.
1.46 லட்சம் இடங்கள் குறைவு
ஏஐசிடிஇ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாடு முழுவதும் 63 பொறியியல் கல்லூரிகள் நடப்பு ஆண்டில் சேர்க்கை வேண்டாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளன. அதேநேரம், 54 கல்லூரிகள் புதிதாக சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளைவிட, சேர்க்கை வேண்டாம் என்று கூறும்கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் சுமார்1.46 லட்சம் பொறியியல் இடங்கள் குறைந்துள்ளன. இளநிலை, முதுநிலைபொறியியல் படிப்பில் 23.28 லட்சம் இடங்களே நடப்பு ஆண்டில் கிடைக்கும். இது கடந்த 10 ஆண்டுகளில் மிகவும்குறைவான இடங்கள்” என்றார்
No comments:
Post a Comment