ஸ்மார்ட்போன்களை 10 % பேர் மட்டுமே கல்விக்காக பயன்படுத்துகிறார்கள்....தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கவலை. - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/07/2021

ஸ்மார்ட்போன்களை 10 % பேர் மட்டுமே கல்விக்காக பயன்படுத்துகிறார்கள்....தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கவலை.

 புதுடெல்லி: ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இணையம் மூலம் பிற சாதனங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அதில், ‘ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகளில் 59.2 சதவீத குழந்தைகள் மற்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். 10.1 சதவீத குழந்தைகள் மட்டுமே ஆன்லைன் கற்றல் மற்றும் கல்விக்காக செல்போனை பயன்படுத்துகின்றனர்.  கிட்டதிட்ட 8 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30.2 சதவீதம் குழந்தைகள் தனித்தனியாக ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.


அவர்களில் 10 வயதுடையவர்களில் 37.8 சதவீதம் பேருக்கு பேஸ்புக் கணக்கு உள்ளது. அதே வயதில் 24.3% பேர் இன்ஸ்டாகிராமில் கணக்கை வைத்துள்ளனர். 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தனித்தனி ஸ்மார்ட்போன்கள் அதிகம் வைத்துள்ளனர். இருப்பினும், லேப்டாப் மற்றும் டேப்லெட்களைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு லேப்டாப்பை விட தனியாக ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொடுக்க விரும்புகிறார்கள். நாடு முழுவதும் 6 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 5,811 குழந்தைகள் பங்கேற்றனர்.


கிட்டதிட்ட 60 பள்ளிகளைச் சேர்ந்த 3,491 மாணவர்கள், 1,534 பெற்றோர்கள், 786 ஆசிரியர்களிடம் சர்வே நடத்தப்பட்டது. குழந்தைகள் இரவில் தூங்குவதற்கு முன் செல்போன்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதுபோன்று அவர்கள் செய்வதால், அவர்களின் தூக்கம் கெட்டுவிடுகிறது. சரியான தூக்கம் இல்லாததால் குழந்தைகள் அதிக கவலையும், சோர்வும் அடைகிறார்கள். ஸ்மார்ட்போன் காரணமாக, இது குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459