அனைத்துக்கும் சம்மதம்\" - இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/05/2021

அனைத்துக்கும் சம்மதம்\" - இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

 


மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன. 

சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வந்தது. ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற வெளிநாட்டு சமூக வலைதளங்கள் விதிகளை பின்பற்ற காலஅவகாசம் கேட்ட நிலையில், அதனை மத்திய அரசு நிராகரித்து இருந்தது.இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் தனிஉரிமை கொள்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும், கருத்து சுதந்திரமும் பாதிக்கப்படலாம் என கூறியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, கருத்து சுதந்திரம் பற்றி இந்தியாவுக்கு ட்விட்டர் பாடம் எடுக்க வேண்டியதில்லை என கூறியிருந்தது. இந்தச் சூழலில் மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. 

 

விதிகளின்படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கின்றன. ஆனால், ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புதல் தெரிவிக்கவில்லை. புதிய விதிகளின்படி குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459