கரோனா 2-வது அலை சூழலில் பொதுத் தேர்வுகளை நடத்தலாமா என்பது குறித்து மத்தியக் கல்வி அமைச்சர் உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்களுடனும், அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களுடனும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற உள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சிபிஎஸ்இ வாரியம், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற இருந்த 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்தும், மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த 12ஆம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தையும் ஒத்திவைத்தும் அறிவித்தது.
மேலும் ஜூன் 1ஆம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும், தேர்வு நடத்த ஏதுவான சூழல் இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாகத் தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்கள், ஐசிஎஸ்இ உள்ளிட்ட கல்வி வாரியங்களின் 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறையாத சூழலில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை மேலும் தாமதிப்பது மாணவர்களின் கவலை, மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன் ஏராளமான நேரத்தையும் வீணாக்கும் என்று இந்தியப் பெற்றோர் சங்கம் பிரதமருக்குக் கடிதம் எழுதியது.
இதற்கிடையே பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்தும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது பற்றியும், அனைத்து மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்தினார். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடனும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரேவும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், கரோனா 2-வது அலை சூழலில் பொதுத் தேர்வுகளை நடத்தலாமா என்பது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். நாளை (மே 23) காலை 11.30 மணிக்கு காணொலிக் காட்சியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.
அவர்களுடன் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களும், செயலாளர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத் தேர்வுகளுடன் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
No comments:
Post a Comment