பள்ளி கல்வி துறையில் செயலர், இயக்குநர்கள் மற்றும் சி.இ.ஓ.,க்கள் வரை, பல அதிகாரிகளை மாற்றம் செய்வதற்கான பட்டியல் தயாராகி உள்ளது.
பள்ளி கல்வி துறையில், பள்ளி கல்வி இயக்குநர் என்ற பதவியில் முதல் முதலாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். கமிஷனர் என்ற அந்தஸ்தில் அவர் பணிபுரிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள், கட்சியினர் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் காணப்படுகிறது.
தற்போது, பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக பள்ளி கல்வி அலுவலகங்களும் செயல்படவில்லை. எனவே, நிர்வாக பிரச்னை ஏற்படாமல் இந்த நிலையிலேயே உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, பள்ளி கல்வி செயலராக உள்ள தீரஜ்குமாருக்கு பதில் வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.
பள்ளி கல்வியில் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், இயக்குநர்களும், இணை இயக்குநர்களும் மாற்றப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் தயாராகியுள்ளது.முதல் கட்டமாக, செயலர் மாற்றமும், அதை தொடர்ந்து இயக்குநர்கள் மாற்றமும் இருக்கும். இந்த மாறுதல் தொடர்பாக, ஒன்றன் பின் ஒன்றாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள் போன்றோர் பள்ளி கல்வி அமைச்சரிடம் மட்டுமின்றி, மாவட்டம் சார்ந்த அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற்று நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment