குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத தனியார் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாகச் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த காலங்களில் அண்ணா பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உயர் கல்வித்துறைச் செயலாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி இருக்கிறோம். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்தாமலேயே தேர்வை எழுத சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது எப்படி நடந்தது என்பது எங்களுக்குப் புரியவில்லை.
23 தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இதுவரை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவில்லை. காரணம் கேட்டால் மாணவர்கள் கட்டவில்லை என்கிறார்கள். மாணவர்கள் கட்டணம் செலுத்திய பிறகும் கல்லூரிகள் காரணம் சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 23 கல்லூரிகளும் தேர்வுக் கட்டணத்தை 24ஆம் தேதிக்குள்ளாக (திங்கட்கிழமை) கட்டினால்தான் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரம் அரசால் வழங்கப்படும்.
ஒருவேளை கட்டணத்தைக் கட்டத் தவறினால் தனியார் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட கூடிய சூழல் உருவாகும். அதைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட கல்லூரிகள் விரும்பினால், உடனடியாகத் தேர்வுக் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
No comments:
Post a Comment