கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




30/05/2021

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு.

 

640452

 கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இதனையொட்டி பிரதமர் மோடி  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இது தொடர்பாக  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 10 லட்சம் வைப்பு தொகை தொடங்கப்படும். இது அவர்களுக்கு  மாதாந்திர தனிப்பட்ட தேவைகளை கவனித்து கொள்வதற்கான மாதாந்திர நிதி உதவியை வழங்க பயன்படும். 18 வயதாகும்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயர் கல்விக்கு உதவித் தொகை பெறுவதற்கு இது பயன்படும்.

அவர்கள் 23 வயதை அடையும்போது தங்களது டெபாசிட் தொகையை தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைக்காக பெறுவார்கள்.  குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு என அனைத்தையும் அரசு வழங்கும். இதன் காரணமாக அவர்கள் வலுவான குடிமக்களாக வளர்ந்து பிரகாசமான எதிர்காலத்தை பெறுவார்கள். இதுபோன்ற கடினமான தருணங்களில் ஒரு சமூகமாக நாம் குழந்தைகளை பராமரிப்பது, ஒளிமயமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை விதைப்பதும் நமது கடமையாகும். கொரோனா நோய் தொற்றின் காரணமாக 2 பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது  வளர்ப்பு பெற்றோர்களை இழந்த அனைத்து குழந்தைகளும் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் இந்த டெபாசிட் தொகையை பெறுவார்கள். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு அனுமதிக்கப்படும்.  தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டால் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து கட்டணங்கள் செலுத்தபப்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் கொரோனாவால் பலியாகும் பட்சத்தில், இஎஸ்ஐ பென்சன் திட்டத்தின் கீழ் தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் பென்ஷனாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் காப்பீடு பலன் தொகை 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த பலனும் அவர்களின் குடும்பத்திற்கு தரப்படும்.

கர்நாடகா அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளின் நலனுக்காக ‘‘முதல்வர் பால’’ என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பிள்ளைகளுக்கு மாதம் ₹3,500 நிவாரணம் வழங்கப்படும். 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளை சிறுவர் நல காப்பகத்தில் சேர்த்து  பராமரிப்பதுடன் உண்டு உறைவிட பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படும். 10ம் வகுப்பு முடித்துள்ளவர்களுக்கு லேப்டாப், டேப் ஆகியவை வழங்குவதுடன் உயர்கல்வி படிக்க தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். 21 வயது நிரம்பிய பெண்களுக்கு ₹1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அதை அவர்கள் திருமணம், சுயதொழில் அல்லது கல்வி என்று எந்த தேவைக்கும் பயன்படுத்தி கொள்ள சுதந்திரம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459