.
அரியர் தேர்வுகளுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்ட மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகத் அறிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழா இன்று (ஏப்ரல் 8) நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களும் முதலிடம் மற்றும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும். இந்த ஆண்டு சுமார் 1.24 லட்சம் மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.கவுரி, ”பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கரோனா தொற்று இல்லாதவர்களுக்கு மட்டுமே விழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரியர் தேர்வுகளுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்ட மாணவர்களுக்கும் இன்று பட்டம் வழங்கப்படும். அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் தேர்ச்சி பெற்ற அரியர் மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. வழக்குகள் குறித்து விவாதிப்பதற்கான நேரம் இதுவல்ல. முறையாகத் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்க உள்ளோம்” என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீதான விசாரணையில் எழுதக் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், எளிதான தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment