உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கல்வித்துறை அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/04/2021

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கல்வித்துறை அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை

 617013


உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2008-ம் ஆண்டு உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் புனிதவதி. இவரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் புனிதவதி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புனிதவதியின் இடமாற்றத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில், 2008 செப்டம்பர் முதல் 2010 அக்டோபர் வரை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட புனிதவதி, பிறகு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.


இதை எதிர்த்து புனிதவதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.


இந்நிலையில், புனிதவதி 2014 மே 31-ம் தேதி ஓய்வு பெற்றதால், தனது பணியை 2008 முதல் 2020 வரை பணிவரன்முறை செய்யக் கோரி தொடக்கக் கல்வி ஆணையரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "மனுதாரர் 2020-ம் ஆண்டு கொடுத்த மனுவைப் பரிசீலித்து, 90 நாட்களில் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்" என தொடக்கக் கல்வி ஆணையருக்கு உத்தரவிட்டார்.


மேலும், "மனுதாரர் தனது மனு, மொபைல் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடி யாக வழங்க வேண்டும். அவரது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அந்த அதிகாரி மனுதாரருக்கு குறுஞ்செய்தி, இ-மெயில் அல்லது பதிவு தபால் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.


ஒருவேளை இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்கவும் நேரிடும்" எனவும் எச்சரித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459