10ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பதில் சிக்கல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/04/2021

10ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பதில் சிக்கல்

 643594


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கல்வி நிலையங்களைத் திறக்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் கோவிட்-19 இரண்டாவது அலையால் மீண்டும் மூடப்படும் நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மாணவர்களை வீட்டிலிருந்த படியே கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழலில் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.


12ஆம் வகுப்பிற்கு மட்டும் மே 3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்த தேர்வு அட்டவணை வெளியானது. இதற்கிடையில் சட்டமன்ற தேர்தல் காரணமாக 12ஆம் வகுப்பிற்கு வரும் 7ஆம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்பிறகு கொரோனா நிலவரம் கட்டுக்குள் இருந்தால் மட்டுமே நேரடி வகுப்புகளை நடத்தலாம். இல்லையெனில் வீட்டிலிருந்த படியே கற்க அறிவுறுத்தலாம்.


மேலும் பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் 10வது ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பிற்கான சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கியுள்ளன. 10ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தாவிட்டாலும் சிறிய அளவில் தேர்வுகள் நடத்தி மாணவர்களின் விருப்பங்களையும், கற்றல் திறன்களையும் அறிந்து வருகின்றனர்.


அதாவது எந்தப் பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற விவரம் கேட்டு அதற்கேற்ப பாடப் பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த சூழலில் 10ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் தொடர் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்போது காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


ஆனால் நடப்பாண்டில் ஒரு தேர்வு கூட நடத்தவில்லை. எனவே கடந்த கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்களைக் கணக்கிட்டு சான்றிதழ் வழங்கலாம் என்று பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459