.
மராட்டியத்தில் ஏப்ரல் 23-ந் தேதி முதல் மே 21 வரை 12-ம் வகுப்பு பொது தேர்வும், ஏப்ரல் 29 முதல் மே 20 வரை 10-ம் வகுப்பு பொது தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த மாத இறுதியில் கூட பொது தேர்வுகள் நேரடியாக மாணவர்களுக்கு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் மாநிலத்தில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் பாதிப்பு 63 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
இதையடுத்து 12, 10-ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தற்போது மாநிலத்தில் உள்ள சூழலை கருத்தில் கொண்டு நாங்கள் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வை ஒத்தி வைத்து உள்ளோம். தற்போது உள்ள சூழல் தேர்வுகள் நடத்த ஏற்ற வகையில் இல்லை. மாணவர்கள் நலனே எங்களுக்கு முக்கியம். தொழில்முறை படிப்புகளுக்கான நுழைவு தேர்வை கருத்தில் கொண்டு 12-ம் வகுப்புக்கு மே மாத இறுதியில் தேர்வுகள் நடத்தப்படும். ஜூன் மாதம் 10-ம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும்.
சுகாதார சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேர்வுகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.
கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கல்வித்துறையினர், வல்லுநர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அனுமதித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இதேபோல தேர்வு தேதிகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி., கேம்பிரிட்ஜ் வாரியங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment