நடப்பாண்டு முதல் நர்சிங், சித்தா, யுனானி ஆகிய படிப்புகளில் சேரவும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் வருகிற 2021 கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆங்கிலம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எம்.பி.பி.எஸ், மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் மற்றும் உயிர் வேதியியல், உயிர் விலங்கியல், நுண்ணறிவியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நடப்பு கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. பொதுவாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் கனவோடு முயற்சிக்கும் நடுத்தர மாணவர்கள், அது கிடைக்காத பட்சத்தில் பிஎஸ்சி நர்சிங் போன்ற படிப்புகளையே தேர்வு செய்வார்கள். தற்போது அதற்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மாணவர்களால் மருத்துவத்திற்க்கு செல்ல முடியாத ஒரு நிலை உருவாகும் என மாணவர்களும் கல்வியாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment