அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகே தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கிடாத்திருக்கை அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்ததும், சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லாததால், கிடாத்திருக்கை பள்ளியில் நியமிக்கப்பட்டேன். 2020-ம் ஆண்டில் நடைபெற வேண்டிய தலைமை ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் என்னைப் போன்றவர்களுக்கு உரிய பணியிடம் கிடைக்காத நிலை ஏற்படும்.
எனவே, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு தடை விதித்து, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் ஏப். 30-க்குள் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment