கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை விட்டு அவர்களுக்கு ஆன்லைனில் அல்லது பள்ளி அளவில் தேர்வு நடத்தலாம் என ஆசிரியர் அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர்பி.கே.இளமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரோனா தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடை பயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு 22-ம் தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது இதைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் 23-ம்தேதி முதல் நேரடி வகுப்புகள் கிடையாது என்றும் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று தொடர்ந்து உறுதிசெய்யப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. கரோனா பரவல் நாடு முழுவதும் தற்போது அதிகரித்துவரும் நிலையில்தமிழகத்தில் ஒரே நாளில் 1,385பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கிடையே, பொதுத்தேர்வு என்பதால் பிளஸ் 2 படிக்கும் பிள்ளைகளை அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம் என பெற்றோர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே பெற்றோரின் அச்சத்தைப் போக்கவும், மாணவர்களின் நலன்கருதியும் பிளஸ் 2 வகுப்புக்கும் விடுமுறை வழங்கி, பொதுத்தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வாக நடத்தப் பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment