யூபிஎஸ்சி தேர்வில் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்ற 86 பேரில் 19 பேர் முதன்மைத்தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஆளுமைத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வெளியிலிருந்து பயிற்சி பெறவும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:
“ராஜா அண்ணாமலை புரத்தில் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதனிலை முற்றும் முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இப்பயிற்சி மையத்தில் 2020-2021-ஆம் ஆண்டில் முதன்மைத் தேர்வுக்கு பயின்ற மொத்தம் 86 தேர்வர்களில், 19 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 8 தேர்வர்கள், தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்த தேர்ச்சி பெற்றுள்ளவர்களில் 9 தேர்வர்கள், மகளிர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு, 2020 நவம்பர் 11 முதல், 2021 ஜனவரி 18 வரை, உண்டு உறைவிடத்துடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. தேர்வினை சிறந்த முறையில் எழுதுவதற்கு, பயிற்சி மையத்திலிருந்து, தேர்வு மையத்திற்கு சென்று வர, சிறப்பு பேருந்து வசதி செய்து தரப்பட்டது.
மேற்குறித்த காலத்திற்கு, ஊக்கத் தொகையாக, மாதம் ஒன்றுக்கு, தேர்வர் ஒருவருக்கு ரூபாய் 3,000/- வீதம் வழங்கப்பட்டது. அவ்வப்போது, தேர்வர்களுக்கு கோவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டு, மையத்தில், நிரந்தரப் பாதுகாப்பு முறை பின்பற்றப்பட்டது.
தற்போது இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள மேற்குறித்த தேர்வர்களுக்கு, இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.
தேர்ச்சி பெற்றுள்ள மேற்குறித்த தேர்வர்கள் தவிர, மேற்குறித்த முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற தேர்வர்களும், இம்மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தினை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9444286657 என்ற புலன எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம்.
மாதிரி ஆளுமைத் தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள். இம்மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். மேற்குறித்த ஆளுமைத் தேர்விற்காக டெல்லி செல்லும் இம்மையத்தில் பயின்று தேர்வான தேர்வர்களுக்கு, பயணச் செலவுத் தொகையாக ரூ.2,000/- ஆண்டு தோறும் இம்மையத்தால் வழங்கப்பட்டு வருகிறது”
இவ்வாறு மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment