புதிய முறையில் 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை! - ஆசிரியர் மலர்

Latest

 




 


31/03/2021

புதிய முறையில் 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை!


640403

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு 9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை தற்போது வழங்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்துவருகிறது.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே கரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.


இதையடுத்து நடப்பு கல்விஆண்டு பள்ளிகளில் நடைபெறும் பருவத்தேர்வுகள், வருகைப்பதிவு, வகுப்பறை செயல்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிட்டு வழங்க தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது.

இந்தசூழலில் தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதனால் பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வீட்டுப்பள்ளி திட்டத்தின்கீழ் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் கணக்கீட்டில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு 9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வழங்குவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தொற்று அச்சத்தால் 9 முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வின்றி தேர்ச்சி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி 9, பிளஸ் 1 வகுப்புமாணவர்கள் நேரடியாக அடுத்தஆண்டுக்கு தேர்ச்சி செய்யப்படுவர்.

அதேநேரம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டாலும் இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் சிக்கல் நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு இந்த மதிப்பெண் அவசியம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு பாடங்கள் மற்றும் தேர்வுகளை இணைய வழியில் நடத்தி முடித்துள்ளன. ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதற்கான சூழல் அமையவில்லை.

கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வு நடத்த முடியாததால் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவின்படி மதிப்பெண் வழங்கப்பட்டது.

அதே மதிப்பெண்களை மீண்டும் 10-ம் வகுப்புக்கும் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள்குறித்து பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது

இதுதொடர்பாக நிபுணர்குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசின் ஒப்புதல் பெற்று அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தெரிவித்தனர்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459