CPS திட்டத்தை ரத்து செய் : 20 ஆம் தேதி முதல் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/02/2021

CPS திட்டத்தை ரத்து செய் : 20 ஆம் தேதி முதல் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

 .


புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திடல் வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி திருச்சியில்  பிப்ரவரி 20 ஆம் தேதி மாநில அளவிலான  தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் : மன்றம் நா.சண்முகநாதன் அறிவிப்பு.


புதுக்கோட்டை,பிப்.15,:புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்திடல் வேண்டும் உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிப்ரவரி 20 ஆம் தேதி மாநில அளவிலான தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற த்தின் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்,அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள ஊதியப் பிடித்தங்கள்,பறிக்கப்பட்டுள்ள ஆண்டு ஊதிய உயர்வுகள்,தேர்வு நிலை/ சிறப்பு நிலை ஊதியங்கள் மற்றும் பதவி உயர்வுகள் போன்றவற்றை திரும்ப வழங்கிடல் வேண்டும்.தமிழ்நாட்டின் சாதாரணநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முதல் வழங்கிடல் வேண்டும்.


பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து ஆசிரிய பெருமக்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை பெற்று  வருகின்றனர்.தற்போது 2020 மார்ச் மாதம் முதல் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் இரத்து செய்யப்பட்டு உள்ளது.அண்ணாவின் பெயரில் கட்சியும்,ஆட்சியும் நடத்தும் தமிழக அரசு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கிய உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தொடர்ந்து வழங்கிடல் வேண்டும்.


பி.லிட் தமிழ் இலக்கியம் படித்து நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று ,பின்னர் பி.எட் ( இளங்கலை கல்வியியல் ) உயர்கல்வி தகுதித் தேர்ச்சி பெற்றுள்ள பி.லிட்,பி.எட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து வழங்கப்படல் வேண்டும்.ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 வயது எனும் உச்ச வரம்பு கைவிடப்படல் வேண்டும்.அரசுப் பளளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படல் வேண்டும்.


ஆசிரியர் தகுதிச் சான்று ஏழாண்டுகளுக்கு மட்டும் செல்லும் எனும் அறிவிப்பு திரும்பப் பெறப்படல் வேண்டும்.வாழ்நாள் தகுதிச் சான்று வழங்கி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 80 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணிவாய்ப்பு வழங்கிடல் வேண்டும்.


உயர்கல்வி பயின்றதற்கு பின்னேற்பு கோரி உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பின்னேற்பு ஆணைகளை விரைந்து வழங்கிடல் வேண்டும்.புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் களையப்படல் வேண்டும்.கட்டணமில்லா சிகிச்சை என்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.ஆசிரியர்களின் பணப்பலன்கள் சார்ந்த தணிக்கைத் தடைகளை விதிகளின்படி விலக்கிக்  கொள்ளத்தக்க வகையில் மண்டலத் தணிக்கை ஆய்வுக் கூட்டங்கள் முறையாக நடைபெற வேண்டும்.


கற்போம் எழுதுவோம் திட்டப் பணிகளில் இருந்து பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் விடுவிக்கப்படல் வேண்டும்.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நடத்தாட்டி ,அலுவலக அடிப்படைப் பணியாளர்,எழுத்தர்,கணினி இயக்குபவர்,இரவு நேரக் காவலர் நியமனங்கள் செய்யப்படல் வேண்டும்.மாணவ,மாணவிகளின் மருத்துவக் கனவை சிதைக்கும் அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு ( நீட்) முற்றிலுமாக இரத்து செய்யப்பட வேண்டும்.2021 சட்டமன்றத்தேர்தல் பணிகளில் இருந்து 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் தொடர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளோர்,மாற்றுத் திறனாளிகள்,கர்ப்பிணிகளுக்கு விதிவிலக்கு தரப்படல் வேண்டும்.பெண் ஆசிரியர்கள் தொலைதூரப் பகுதிகளில் மலைப் பகுதிகளில் பணியமர்த்ப்படுவது கைவிடப்படல் வேண்டும். 


புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திடல் வேண்டும்.தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் ஆசிரியர்,அரசு ஊழியர் சங்கத் தலைவர்களோடு நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திடல் வேண்டும் என்பது போன்ற  25 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி திருச்சியில் பிபர்வரி 20 ஆம் தேதி சனிக்கிழமை  திருச்சி கண்டோன்மென்ட்,பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிற்பகல் 2 மணியளவில் மாநில அளவிலான  தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459