திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தாலும் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெறுவதற்கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு என்று துணைவேந்தர் கே. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
தேசிய ஆசிரியர் கல்வியியல்கவுன்சில் மற்றும் பல்கலைக்கழகமானியக் குழுவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட். படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடப்புகல்வியாண்டில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் வரையிலும்,மே மாதத்தில் வகுப்புகள் தொடங்கப்படவும் உள்ளது. இதற்காக தமிழ் வழியில் 500 மாணவர்கள், ஆங்கில வழியில் 500 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பார்த்தசாரதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இனி விருப்பமுள்ள மாணவர்கள் 2 ஆண்டு பிஎட்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்தால் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் உரிய அங்கீகாரம் கிடைக்காது என்று தவறான தகவல் பரவுகிறது. ஆனால், அதுமுற்றிலும் உண்மைக்கு புறம்பானது. திறந்தநிலை பல்கலையில் பயின்ற மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறையில் பணியில் சேர முழு அங்கீகாரம் உண்டு. பல மாணவர்கள் இரு துறைகளிலும் நல்ல பணியில் சேர்ந்துள்ளனர்.
எனவே, மாணவர்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் திறந்தநிலை பல்கலையில் சேர்ந்து படிக்கலாம். அதேபோல், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மண்டல வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கரோனா பாதிப்பு காரணமாக பருவத் தேர்வில் உள்ள அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திறந்தநிலை பல்கலைக்கழகத்திலும் அதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. மதிப்பெண்களை உயர்த்திக் கொள்வதற்காக விரும்புபவர்கள் மட்டும் மறுதேர்வு எழுதிக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment