. கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு 814 கணிப்பொறி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வில் மொபைல் போன்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி திருச்சி, திருச்செங்கோடு, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 3 மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதன்மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு நியமித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் 3 மையங்களில் மட்டுமல்லாமல் பெரும்பாலான மையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செயய்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் “742 பேர் தேர்வாகி பணிநியமனங்கள் வழங்கப்பட்டு விட்டது. ஓய்வு பெற்ற நீதிபதியும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். அறிக்கையை பார்த்தபிறகு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், “கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும். வேண்டுமென்றால் தேர்வு நடந்த மையங்களில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யலாம். இல்லையென்றால் தேர்வு எழுதியவர்களை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தலாம். இந்த விசாரணை குறித்த அறிக்கையை ஏப்ரல் 30 ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி அளிக்க வேண்டும். ஓய்வு பெற்ற டிஐஜி-யையும் விசாரணைக்கு இணைத்து கொள்ளலாம்” என உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment