ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உண்ணாவிரதம் / தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/02/2021

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உண்ணாவிரதம் / தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

 


ஊடகச் செய்தி

                                                             மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 03/2021  நாள்: 10.02.2021                                       


ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உண்ணாவிரதம் /

தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் /

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


                         72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக தமிழக அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

 

               இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை.

 

                    அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள்,  எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், ஊரடங்கு காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளைத் திரும்ப வழங்கிட வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பி வேலையின்றித் தவிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ளும் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றுவருகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

              ஜனநாயக முறைப்படி சென்னை எழிலகத்தில் அறவழிப் போராட்டமான உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை காவல்துறையினர் கண்ணியக் குறைவாகவும், அராஜகமான முறையிலும் கைது செய்ததும், உண்ணாவிரதத்திற்காகப் போடப்பட்ட பந்தலை அகற்றியதும் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

              ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தனிமனிதர்களல்ல. அவர்கள் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தலைவர்கள் என்பதைத் தமிழக அரசு நினைவில் கொள்ளவேண்டும். அறவழியில் போராடுவதற்குக் கூட இந்த ஆட்சியில் அனுமதி மறுக்கப்படுவது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறானதாகும்.

 

              தமிழக அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் மீறி நெஞ்சுறுதியோடு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் போராட்டக் களத்தில் இருப்பது பாராட்டுக்குரியது. ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளர் .மோசஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு ஜாக்டோ ஜியோ தலைவர்களின் உடல்நிலையையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் உணர்வுகளையும் கவனத்தில் கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,

ச. மயில்
பொதுச்செயலாளர். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459