ஆதிதிராவிடர் மாணவியருக்கான கல்வி உதவித் தொகையில், முறைகேடு செய்த தலைமை ஆசிரியைக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம், சிவராஜபுரத்தை சேர்ந்தவர், முத்துவளவன். இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:திருநெல்வேலி டவுன், கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர், ஆனந்த பைரவி என்ற நாச்சியார். ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மாணவியருக்கு, உதவித்தொகை மற்றும் ஆங்கில டியூசனுக்கான தொகை வழங்காமல், முறைகேடு செய்துள்ளார்.
இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி, 'தலைமை ஆசிரியை மீதான குற்றச்சாட்டு உண்மை' என, அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே, தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: மாணவியருக்கு, 2017 -18ம் கல்வியாண்டில், 1 லட்சத்து, 2,950 ரூபாய் உதவித் தொகை மற்றும் இதர தொகையை வழங்காமல், தலைமை ஆசிரியை முறைகேடு செய்தது, விசாரணை அறிக்கை வாயிலாக தெரிகிறது.அறிக்கை அடிப்படையில், தலைமை ஆசிரியை மீது, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.
தலைமை ஆசிரியை, தன் கடமையில் இருந்து தவறியதை காட்டுகிறது. இது, மனித உரிமை மீறல்.இதற்காக, மனுதாரருக்கு அரசு இழப்பீடாக, 25 ஆயிரம் ரூபாயை, ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையை, தலைமை ஆசிரியையிடம் வசூலித்து கொள்ளலாம். மேலும், குற்றச்சாட்டு குறித்த விசாரணையை, மூன்று மாதத்துக்குள் முடிக்க, பள்ளிக் கல்வித் துறை இயக்குனருக்கு, அரசு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment