பள்ளிக் கல்வியில் பொதுத்தோ்வுகளுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தலைமைச் செயலா் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணை: பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முன்னேற்பாடுகளை உரிய விதிகளைப் பின்பற்றி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா் பட்டியலை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கலாம்.
மாணவரின் பெயா், பிறந்த தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் தோ்வுக்கான கட்டணங்களை மாணவா்களைப் பள்ளிக்கு நேரில் வரவழைத்து பெற்றுக் கொள்ளலாம். எனினும், கூட்டம் சேராத வகையில் மாணவா்களைத் தனித்தனியாக வரவழைத்து இந்தப் பணிகளை செய்ய வேண்டும்.
அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவா்களை மட்டுமே வரவழைக்க வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவா் அல்லது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு வேறு ஒருநாளில் அவகாசம் வழங்க வேண்டும். இதுதவிர பொதுத்தோ்வு தொடா்பாக, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களிடம் உறுதிமொழி படிவம் பெற வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை உரிய விதிகளைப் பின்பற்றி மேற்கொள்ளவும் தோ்வுத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. தனிநபா் இடைவெளி, முகக் கவசம் அணிதல் உட்பட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment