கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் 10 மாதங்களுக்குபின் கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதையடுத்து கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த ஜனவரி 6, 7, 8-ம் தேதிகளில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதையேற்று 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜனவரி 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
அதேநேரம் கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வழங்கியிருந்தது. அதற்கேற்ப பள்ளி நுழைவு வாயிலில் வெப்பமானி கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல், வகுப்பறையில் மேஜைக்கு இருவர் வீதம் 20 முதல் 25 மாணவர்கள் வரை அமர வைக்கப்பட்டனர். பள்ளி வளாகங்களில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு உட்பட கட்டுப்பாடுகளும் முறையாக பின்பற்றப்பட்டன.
முதல்நாள் வகுப்பறையில் பாடங்களை தவிர்த்து மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் மற்றும் கரோனா தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரலாம் என்ற அறிவிப்புக்கு மத்தியில் முதல் நாளிலேயே 85 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்தசூழலில் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீண்ட நாட்களுக்குபின் மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் முதல் 2 நாட்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படும். மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள் வழங்கப்படும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கேற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களை கொண்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் 663 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் நேற்று 100 சதவீத ஆசிரியர்கள் வருகையுடன் திறக்கப்பட்டன. உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலை முதலே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
No comments:
Post a Comment