*2019 ஜேக்டோஜியோ போராட்டம்: மதுரை மத்திய சிறையில் ஓர் இரவு.. ஒரு பகல்..* - ஆசிரியர் மலர்

Latest

 




 


31/01/2021

*2019 ஜேக்டோஜியோ போராட்டம்: மதுரை மத்திய சிறையில் ஓர் இரவு.. ஒரு பகல்..*



குழந்தைகளுக்கு 2019 ஜனவரியில் காதுகுத்து வச்சிருந்தோம்.. 

அதனால தெனமும் மறியலுக்கு வந்தாலும் கைதாகாமலேயே திரும்பிடுவேன்.. செய்முறைக்கு மொத நாளு மட்டும் ஒளிஞ்சு படுக்க வேண்டியதாயிடுச்சு..

முன்கூட்டியே அரஸ்ட் ஏதும் பண்ணிட்டா.. அப்புறம் சொந்த பந்தமெல்லாம் வச்சு செய்வாகலேன்னு ஒரு பயம்.. ஒரு வழியா செய்முறை முடிஞ்சதும் வழக்கமா கூட்டங்களுக்கு செல்வது போல ஒரு கைலி, ரெண்டு சட்டை, பேண்ட், பேஸ்ட், பிரஸ் எடுத்துகிட்டு கிளம்பிட்டேன்..


போனது லேட்டு..

மறியலுக்கு போன நம்ம மக்களுக்கு  அதிர்ச்சி..

இந்த வாட்சப்ல கூவுனவக ஒருத்தரயும் அங்க காணோம்..

போலீஸ் அள்ளிட்டு போயி மண்டபத்துல அடைச்சிடுச்சு..


நாம எப்படி ஆளு..

ஆட்டோ பிடிச்சு மண்டபத்துக்கே போனா..

போலீஸ் உள்ள விடல..

டேய் நானும் ரவுடி தாண்டான்னு சொல்லிப் பாத்தும் கேக்கல.. அப்புறம் வெளிய நிக்கிறவங்க அஞ்சு, பத்துனு கூடினதும் சவுண்டு கூடிருச்சு..

இப்ப உள்ள விடலன்னா மண்டபத்து முன்னாடி மறியல் பண்ணுவோம்னு அந்த லேடி எஸ்.ஐ.கிட்ட கொஞ்சம் சவுண்டா சொன்னேன்..

சரி , உள்ள விடுங்கனு சொல்லிட்டாங்க.. நாங்கலாம் அப்டி வாலண்டியரா போயி வண்டில ஏறுன ரவுடிங்க...


மதியம் வரைக்கும் நல்லா தான் போய்கிட்டிருந்துச்சு..

அப்புறம் தான் நிலவரம்  கொஞ்சம் பரபரப்பா மாறுச்சு..

*விடுவாங்களா மாட்டாங்களா.. ரிமாண்ட் பண்ணிடுவாங்களா.. பொறுப்பாளருக ஒருத்தர் கூட உள்ள இல்ல.. நம்ம மட்டும் கேண கிறுக்கா..* என ஆங்காங்கே கொதிக்க ஆரம்பித்தனர்..


கைதான போராளிகளிடம் பேச திமுக மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்தனர்.. யாரும் பொறுப்பு எடுக்காததால நானே கூட்டத்தை ஒருங்கிணைச்சு நடத்த ஆரம்பிச்சேன்.. வாழ்த்தி பேசிட்டு போன பிறகு ஓய்வு பெற்ற ஆசிரியர், அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் பேசிகிட்டிருந்தாங்க..


போலீஸ் அலர்ட்டானது..

அரஸ்ட் பண்ணி ஏத்திட்டு போக வண்டி வந்து கேட்ல நின்றது.. பெண்களையும் ஓய்வு பெற்றவர்களையும் தவிர மீதி இருக்கிற பத்து, பதினைந்து ஆண்களையும்  ரிமாண்ட் செய்வது தான் போலீஸ் திட்டம்.. ஆனா, எதுவுமே சொல்லாம ..

போயி வண்டில ஏறுங்கன்னு சொன்னதும் நம்மாளுகளும் பத்து பேர் வரைக்கும் போயி வண்டியில ஏறிட்டாங்க.. நான் ஏற முடியாதுனு வாதம் பண்ணேன்..

அரஸ்ட் பண்ணுங்க.. ரிமாண்ட் பண்ணுங்க.. ஆனா சக தோழர்களிடம் அறிவிப்பு செய்யுங்க..

அப்புறம் கூட்டிட்டு போங்கன்னு சத்தம் போட்டேன்.. காலைல சந்திச்ச அதே லேடி எஸ்.ஐ. வந்தாங்க..

நான் தான் *காலையிலேயே  வேணாம் சார்.. வீட்டுக்கு போங்கனு சொன்னேன்லனு சொல்லி நக்கலா சிரித்தது..* ஏம்மா, நான் துணிமணியோட தயாரா தான வந்திருக்கேன்..

சொல்லிட்டு கூட்டிட்டு போங்கன்னேன்..


வம்படியாக ஏற்ற முயன்றனர்..

சுற்றி வளைத்து அப்படியெல்லாம் எங்க புள்ளைகள விட முடியாது.. எங்களையும் சேர்த்து ரிமாண்ட் பண்ணுங்கனு சுற்றி  வளையம் போட்டு நின்றனர் பெண் ஆசிரியர்கள்..

குறிப்பாக கள்ளர் பள்ளி பெண் ஆசிரியர்கள் வெற்றிச்செல்வி, கலையரசி, சீதா, ஆனந்தி என இன்னும் பலர்..

நூறாண்டுகளுக்கு முன்னரே பெருங்காமநல்லூர் போராட்டத்தில் வெள்ளை ஏகாதிபத்திய காவல் துறைக்கு எதிராக களம் கண்ட மாயக்காவின் வம்சாவளி இவர்கள்..


இந்த களேபரங்களுக்கு இடையிலேயும் சில நண்பர்கள் தங்கள் காவல் துறை, நீதித் துறை உறவுகளின் சிபாரிசுகள் மூலம் சில ஏற்பாடுகளை செய்து விட்டிருந்தனர்..
காவல் துறை வண்டியில் ஏறும் முன்பே மூன்று, நான்கு பெயர்களை சொல்லி கீழே இறங்குங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு காவலர்..


வண்டி  அல்லிநகரம் காவல் நிலையம், மாஜிஸ்திரேட் வீடு, கானா விளக்கு மருத்துவமனை என அங்குமிங்கும் சுற்றி நள்ளிரவில்  மதுரை மத்திய சிறைக்குச்  சென்றது..


அல்லிநகரம் காவல் நிலையத்தில் அன்பொழுக பேசி விசாரணை திரைப்பட  காட்சிகளை நினைவூட்டினார் ஏட்டய்யா ஒருவர்..


இடுப்புக் கயிறு உட்பட கழட்டிடுங்க.. வாட்ச், செயின், பணம், போன் எதுவும் வைக்கக்கூடாதுனு உச்சரித்து கொண்டே இருந்தார்..


விடுங்க ஏட்டய்யா.. மாஜிஸ்திரேட் ரிமாண்ட் பண்ண வேணானம்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க.. விடுங்க இருக்கட்டும்னு கொஞ்சம் ஆறுதலாக பேசினார் உடனிருந்த மற்றொரு காவலர்.. ஆளுக்கு நாலு இட்லி வாங்கிக் கொடுத்து மாஜிஸ்திரேட் கிட்ட கூட்டிட்டு போனார்கள்.. சொல்லியே ஆகணும், இட்லி ரொம்ப நல்லா இருந்துச்சு..


உங்க கோரிக்கையெல்லாம் நியாயம் தான்.. ஆனாலும்னு சொல்லி ரிமாண்ட் பண்ண உத்தரவிட்டு அனுப்பி வச்சாங்க அந்த அம்மா..


மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தனர்..

உயரம், எடை, மச்சம், தழும்பு, இரத்த அழுத்தம் பார்த்தனர்..


இந்த இரத்த அழுத்தம் தான் நமக்கு பிரச்சினை ஆயிடுச்சு..

வரிசையா நில்லுங்க.. வரிசையா நில்லுங்கனு கொடுங் குற்றவாளிகளை போலவே ஒவ்வொரு இடத்திலும் சங்கடப்படுத்தினர்..


நான் ஐந்தாவது ஆளாக இருந்தேன்.. பி.பி. 150க்கு மேலிருந்தது.. சரி, போய் உட்காருங்க.. நாலஞ்சு பேரு கழிச்சு பாக்கலாம்னு சொல்லவும் போய் உக்கார்ந்தாச்சு.. அங்க ஒரு நண்பர்.. இந்த பொறுப்பாளர்கள்லாம் சார்னு ஆரம்பிச்சு கழுவி  கழுவி ஊத்திட்டாரு.. நாம விட்டுக் கொடுக்க முடியுமா..

வாக்குவாதமாயிடுச்சு..
திரும்ப கூப்பிட்டாங்க..

பி.பி.160.. மறுபடியும் வெயிட்டிங்.. பி.பி.180க்கு மேல..

போலீஸ் முழிச்சாரு..


எனக்கு மனசுல.. அன்ஃபிட்டுன்னு அவனுக சொல்றது ஒரு பக்கம் இருக்க, நம்மாளுக வாட்சப்ல என்னென்ன  போடுவானுகளோங்கிற சிந்தனை ஒரு பக்கம்.. சிறைக்கு செல்லும் வாய்ப்பை இழந்துடக் கூடாதுங்கிற உறுதி ஒரு பக்கம்.. 

சரிங்க சார்.. 

எவ்வளவு சொன்னா டாக்டர் ஓகே சொல்வார்னு போலீசிடம் கேட்டேன்..

140ன்னார்..

சரி, அதயே சொல்லுங்கனு சொல்லி அரஸ்ட் ஆனேன்..


நள்ளிரவில் மதுரை மத்திய சிறைக்கு போனோம்னு சொன்னேன் இல்லையா..

அந்நேரத்திலும் பல சிறை நடைமுறைகள்.. கிறுகிறுன்னு வந்தது.. தழும்பு, மச்சம்.. என்ன சாதி... அதே கேள்விகள்..


அல்லி நகரம் காவல் நிலையத்தில் அந்த ஏட்டய்யா வாங்கி வைத்த பணம், பொருட்களை தொடர்ந்து நச்சரித்து  சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கச் செய்தார் உடன் வந்த இளம் காவலர் ஒருவர்.. இல்லையென்றால் அபேஷ் தான் போல..


தப்பா நினைச்சுக் காதீங்க..

தப்பா நினைச்சுக் காதீங்கனு சொல்லி சோதனை செய்கிறோம்ங்ற  பெயரில் போட்டிருந்த ஜட்டி முதற்கொண்டு கழட்டி உரிமைக்காக போராடிய எங்களை நிர்வாணமாக்கி அசிங்கப்படுத்தியது மாண்புமிகு எடப்பாடியார் அரசு.. செய்த குற்றம்? 5 இலட்சம், 10 இலட்சம்னு  நாங்க  கட்டிய பணம் என்னாச்சு? எங்க போச்சு..? கணக்கு எங்க?  ஈ.பி.எஸ். .. ஓ.பி.எஸ்.. அவர்களே..  *சி.பி.எஸ் ரத்து செய்யப்படும் என அம்மா சொன்னது என்னாச்சு..?* கேட்டது தான் குத்தமாப் போச்சு..!!


உள்ள போனா 10×30 அளவில் ஒரு பெரிய ஹால்.. 

அதுக்குள்ள ஏற்கனவே நிரம்பிக் கிடந்தனர் ஜேக்டோஜியோ போராளிகளும் பிற குற்ற வழக்கு கைதிகளும்..


பார்த்தேன்..

கழிப்பறை வாசலில் மட்டும் கொஞ்சம் இடத்தை விட்டு வைத்திருந்தனர்..

கழிப்பறைகளுக்கு கதவுகள் கிடையாது..

இரவு உணவு சாப்பிட்ட மிச்சங்கள் அங்குமிங்குமாக வேறு வாசலில் சிதறிக் கிடந்தது..

வேறு வழியில்லாமல் அங்கு தான் போனேன் படுக்க..


என் குரல் கேட்டு கூட்டத்திற்குள் கிடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் என் பெயர் சொல்லி  அழைத்தனர்.. ஜேக்டோஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக போராடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தன் சக தோழர்களோடு படுத்திருந்திருந்த முனிஷ் மற்றும் லெனின்.. தோழர்களை கொஞ்சம் ஒழுங்குபடுத்தி எனக்கு   கொஞ்சம் இடத்தை கண்டுபிடித்து கொடுத்தனர்..


சிறை வழக்கப்படி மறுநாள் காலையில் குளிக்க சோப்பும் சீகைக்காயும் ஒவ்வொருவருக்கும்  கொடுத்தார்கள்.. தேய்தேய்ன்னு எம்புட்டு தேய்ச்சாலும் நுரை வராத சோப்பு.. ஸ்பெஷல் தயாரிப்பு போல..


ஆளே இல்லன்னா கூட கழிப்பறைக்கு போனா கதவடைச்சுக்கிர்றது தான் பெரும்பாலான வழக்கம்.. ஆனா சிறையில வேற பழக்கம்.. கைதிக பூராம் சுத்தி இருக்க , கதவில்லாத கழிப்பறையில தான் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போகணும்.. நான் மதுரை மத்திய சிறையில ரெண்டு மூணு தடவ ஒண்ணுக்கு போயிருக்கேன்.. ஒரு தடவ ரெண்டுக்கு போயிருக்கேன்.. ஒரு தடவ குளிச்சிருக்கேன்.. ரெண்டு  வேள சாப்பிட்டிருக்கேன்.. கள்ளர் பள்ளிகளில் இருந்து ஏற்கனவே கைதாகி இருந்த வாஞ்சி, பாலா, பிரேம், செல்வேந்திரன் மற்றும் கார்த்திகைராஜா ஆகியோர் நீங்க வந்த நேரம்.. இன்னைக்கு சாப்பாடு கொஞ்சம் பரவாயில்ல என்றார்கள்.. அதுக்குள்ள தோழர்கள் வெளிய எடுத்துட்டாங்க.. இரவுச் சாப்பாடு ஒரு பெரிய ஹோட்டலில் முடித்து விட்டு வந்தோம்.. கம்பம் வட்டார கிளையின் சிவாஜி, ஜெ.முருகன், ரமேஷ் உள்ளிட்ட தோழர்கள்  காரில் ஏற்றி வந்து கம்பம் பகுதி நண்பர்கள் அனைவரையும் அவரவர் வீடுகளில் இறக்கி விட்டு, மாலை அணிவித்து வீட்டாருக்கும் தைரியம் கூறிச் சென்றனர்..


உள்ள இருந்த ஒருநாப் பொழுதும் நடந்து நடந்தே சரியாப் போச்சு.. அன்று பார்வையாளர்கள் நாளாம்.. கள்ளர் பள்ளி மாவட்ட கிளை சார்பில் தோழர்கள் தீனன், முருகன்  உள்ளிட்டோர்.. ஜேக்டோஜியோ சார்பில் அன்பழகன் உள்ளிட்ட தோழர்கள்.. தேனி மாவட்டக் கிளை சார்பில்.. நட்பு வட்டத்தின் சார்பில்.. வேறு சில இயக்கங்களின் சார்பில் என ஒலிபெருக்கியில் பெயர் அறிவிப்பு செய்யப்பட்டுக் கொண்டே இருந்தது..  பார்க்கப் போக, திரும்பி வற.. என அன்றைய பகல் பொழுது போனது.. மாலையில் சிறைக்குள் இருக்கும் தோழர்கள் சிறை வளாகத்தை வழக்கம் போல கற்றல் வளாகமாக மாற்றினர்.. பலருக்கும் இதுவே முதல் சிறை அனுபவமாக இருந்தது.. வரலாற்றின் பல திருப்பு முனைகள், சரித்திர சந்திப்புகள், புதிய புதிய தலைமைகள் உருவாகிற இடங்களில் சிறைச்சாலைக்கு முதலிடம் எப்போதும் உண்டு..  போராட்டத்தை, போராட்டக் காரர்களை ஒடுக்க நினைத்து அரசாங்கம் உள்ளே தள்ளுவதும் பலமடங்கு உள்ளத் தெளிவும் உறுதியும் பெற்று சிறையில் இருந்து வெளிவருவதும்
முன்னைவிட பெரும்பலம் கொண்டு போராடுவதும் காலங்காலமாக வரலாறு கண்ட மறுக்க முடியாத உண்மை... முழுமையான அனுபவம் பெறுவதற்கு அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போகணும்.. 

------------------------


வாரவாரம் இயக்கப் பணிகளுக்காக வெளியூரு போவது போல.. போயிட்டு எந்நேரம்னாலும் வீட்டுக்கு வந்துருவாருங்கிற எண்ணம் என் மனைவிக்கு..


மறுநாள் வழக்கம் போல பள்ளிப் பார்வைக்கு போன இடத்துல, மல்லிங்காபுரம் டீச்சர் ஒருத்தவங்க தான் , இங்க பாருங்க மிஸ்.. எப்புடி அரஸ்ட் பண்ணிருக்காங்கன்னு சொல்லி,

தேனி பெத்தனாட்சி மண்டப கைது வீடியோவை காட்டிருக்காங்க.. அதப் பார்த்து.. இது என் வீட்டுக்காரர் மிஸ்னு சொல்லி அழுதிருக்காங்க...


----------------------------


பலமுறை அழைத்தும் போன் சுவிட்ச் ஆப்னு வருதேன்னு.. மீண்டும் மீண்டும் என்னங்க.. என்னங்க.. என்னங்கன்னு  பல முறை அனுப்பிய வாட்சப் தகவல்களை மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகு தான் நானே பார்த்தேன்.. மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டதும் ஒரு துண்டு, கைலி, பேஸ்ட்,  பிரஸ் தவிர  நான் வைத்திருந்த பர்ஸ், போன் அனைத்தையும் பையில் போட்டு   அங்கு வந்திருந்த தோழர்களிடம் கொடுத்து விட்டுச் சென்று விட்டேன்.. அந்தப் பை மறுநாள் காலையே எனது வீட்டுக்கு வந்து விட்டது.. என் மனைவியின் அழைப்பு அருகில் கிடந்த பைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது தெரியாமல் பாவம் மீண்டும் மீண்டும் அழைத்துக் கிடந்திருக்கிறார்கள்...

----------------------------


ஏட்டையா ஒருத்தர், கைதான அனைவரையும் இடது கையக் காட்டுங்க.. இடது கையக் காட்டுங்கன்னு கேட்டார்.. என்னன்னு விசாரிச்சா, இடது கையில மச்சம் இருக்கவங்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமாம்...???

----------------------------


நம்மல்ளாம் ஆசிரியர்கள்.. அரசு ஊழியர்கள்.. அரசுக்கு  வருமான வரி கட்றுவங்க.. மேலும் நாம போராடத் தான செய்ஞ்சோம்.. தப்பு எதுவும் செய்யலயே.. அதுனால ஜெயிலுக்கு போனாலும் நமக்கு தனி கவனிப்பு, தனி உபசரிப்பெல்லாம் இருக்கும்னு நெறய பேர் பேசுறது கேக்க முடிஞ்சது...


ஆனா, உள்ள போனா எல்லாரு டவுசரயும் தான் கழட்டுறானுக..


-----------------------------


ஜெயிலுக்கு போயிட்டு அப்படியே வீட்டுக்குள்ள போகக் கூடாது.. அது வீட்டுக்கு ஆகாதாம்.. வெளியிலேயே தண்ணிகாயவச்சு, தலவழியா ஊத்திட்டு, புதுச உடுத்திகிட்டு தான் உள்ள போகணுமாம்....

பார்த்தது..!

------------------------------


அண்ணன், தம்பிக ஜெயிலுக்கு போயிட்டு வந்தா அக்கா, தங்கச்சிக புதுத் துணி எடுத்துக் கொடுக்கணுமாம்.... கறி எடுத்துக் கொடுக்கணுமாம்...

கிடைச்சது..!!

-----------------------------


2004ல் பணிக்கு சேர்ந்தோம்.. 2006 முதல் தொடர்ந்து அனைத்து வேலை நிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் பங்கெடுத்திருக்கிறேன்..


வாழ்க்கை போராட்ட மயமானது..

போராட்டம் இன்பமயமானது...


இத்துணூண்டு சிறை அனுபவமே 

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என எழுத எழுத நிறைய தோன்றுகிறது..


அடுத்த பதிவில் நிறையும் ...


அன்புடன் *தே. சுந்தர்*

மாவட்ட துணை செயலாளர் 

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  - கள்ளர் பள்ளிக் கிளை*


மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்


1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459