அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு : பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா .... - ஆசிரியர் மலர்

Latest

 




26/12/2020

அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு : பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா ....

 


விருதுநகரில் அரசு உத்தரவை மீறி  தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அப்பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த பிப்ரவரி முதல் பல்வேறு கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வாரம் முதல் கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.

ஆனாலும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கவும் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகளில் அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் விருதுநகரில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒன்றில் பிளஸ் 2 மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணிக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் சின்ராஜ் சம்பந்தப்பட்ட பள்ளியில் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பள்ளி வகுப்பறையில் ஏராளமான மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, பள்ளியில் அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சின்ராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் பள்ளிக்கு வந்த மாணவிகள் அனைவரையும் உடனடியாக அனுப்பி வைக்கும்படியும் உத்தரவிட்டார். அதையடுத்து சிறப்பு வகுப்பில் கலந்துகொள்ள வந்த மாணவிகள் அனைவரும் உடனடியாக பள்ளியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459