மத்திய பல்கலைக்கழங்களில் சேருவதற்காக வரும் கல்வியாண்டு முதல் பொது தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கட்ஆப்பை எடுக்காமல் பொது நுழைவு தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான திறனாய்வு தேர்வு முறைகளை பரிந்துரை செய்யும் வகையில் ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும். இது தொடர்பாக உயர்கல்வி செயலாளர் அமித் கரே கூறுகையில், “பொது நுழைவு தேர்வு தேசிய தேர்வு முகமை மூலமாக நடத்தப்படும். அனைத்து மத்திய பல்கலைக்கழகத்திலும் சேருவதற்கு விரும்பும் அனைவருக்கும் இந்த தேர்வு கட்டாயமாகும். 2021-2022ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த தேர்வு அமல்படுத்தப்படும்”என்றார்.
தற்போது மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கூட இடம் கிடைப்பதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் கட்ஆப் மதிப்பெண் உயர்ந்து கொண்டே போகிறது. சில மாநில பாடத்திட்டத்தின்படி அம்மாநில மாணவர்கள் எளிதாக 90 சதவீத மதிப்பெண் மேல் பெற முடிகிறது. சில மாநிலங்கள் கடுமையான பாடத்திட்டத்தை கொண்டிருக்கின்றன.எனவே பொது நுழைவுத்தேர்வு மூலம் பொதுவான போட்டி இருக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். டெல்லி பல்கலைக்கழகம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் 54 மத்திய பல்கலைக்கழகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment