ஆதார் எண்ணை இணைப்பது மற்றும் புதிய விடைத்தாளைப் பயன்படுத்துவது குறித்த விளக்கங்களைப் பெற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை ஜனவரி 8-ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வர்கள் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவு மூலம் ஆதார் எண்ணை இணைத்த பிறகே போட்டித் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.
ஜனவரி 3-ம் தேதி குரூப்-1 தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும் எனத் தேர்வாணையம் அறிவித்துள்ளதால் தேர்வர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல புதிய ஓஎம்ஆர் விடைத்தாள்களிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, ''விண்ணப்பதாரர்கள் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கத் தேர்வாணையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் அலுவலக நேரங்களில் (காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) எல்லா வேலை நாட்களில் வரும் 08.01.2021 வரை தொடர்பு கொள்ளலாம்.
அதேபோலத் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வாணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு தேர்வாணையத்தால் இனி வரும் காலங்களில் நடத்தப்படவிருக்கும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ள OMR விடைத்தாள் பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமும், விடைத்தாள் கையாளும் முறை குறித்த விளக்கக் குறும்படமும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் இவ்விடைத்தாளில் இடம்பெற்றுள்ள அறிவுரைகளையும், குறும்படத்தில் இடம்பெற்றுள்ள விளக்கங்களையும் கவனத்துடன் கருத்தில் கொண்டு சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment