கேரள மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8, 10 மற்றும் 14-ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக நடந்தது. வாக்குகள் கடந்த 16-ம் தேதி எண்ணப்பட்டன. அதில் ஆளும் சி.பி.எம் அதிக இடங்களில் வென்று எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. கேரள தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 சீட்டுகளில், சி.பி.எம் 53 சீட்டுகளை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. பா.ஜ.க 35 சீட்டுகளையும், காங்கிரஸ் 10 சீட்டுகளையும் பிடித்தன. கேரள உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவு இளம் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். முதலில் சி.பி.எம் கட்சி கல்லூரி மாணவிகள் உள்ளிட்டவர்களை களம் இறக்கியது. அதைத் தொடர்ந்து பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இளம் வேட்பாளர்களை அதிக அளவில் களம் இறக்கின. நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் சேர்மன் பதவிக்காக கவுன்சிலர்களைத் தேர்வு செய்து வருகின்றன.
அதன்படி திருவனந்தபுரம் மாநகராட்சி சேர்மனாக 21 வயதான ஆர்யா ராஜேந்திரனை சி.பி.எம் மாவட்டக்குழு தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ஆர்யா ராஜேந்திரன். எஸ்.எஃப்.ஐ மாநிலகுழு உறுப்பினராகவும், சி.பி.எம் கட்சியின் சிறுவர்கள் அமைப்பான பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். முடவன்முகல் வார்டு கவுன்சிலரான இவரது தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். தாய் ஸ்ரீலதா எல்.ஐ.சி ஏஜெண்டாகவும் உள்ளார்.
No comments:
Post a Comment