தமிழக அரசு பிறப்பிக்கும் அரசாணைகள், உத்தரவுகள் தமிழில் இல்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு - ஆசிரியர் மலர்

Latest

 




17/12/2020

தமிழக அரசு பிறப்பிக்கும் அரசாணைகள், உத்தரவுகள் தமிழில் இல்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு

 


தமிழக அரசு பிறப்பிக்கும் அரசாணைகள், உத்தரவுகள் தமிழில் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் முதல் மொழியாக தமிழையும், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழி கொள்கை பின்பற்றப்பட்ட போதும், தொன்மையான தமிழ்மொழி, அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறது.

அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் ஆகியவை ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகிறது. சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தமிழில் தயாரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கும் நிலையில், அதே நடைமுறையை அரசாணைகள், சுற்றறிக்கைகள், கடிதங்களை தயாரிக்கும்போது பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. தமிழக டிஜிபி, காவல் துறை அதிகாரிகளுக்கு, கடிதங்களை தமிழில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கு தான் அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு மனுவுக்கு மார்ச் 29ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459