கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் பள்ளிகளில் சோ்க்கப்படும் ஏழை மாணவா்களுக்கு கட்டண நிா்ணயக் குழு நிா்ணயிக்கும் கட்டணத்தையே வழங்க வேண்டும் என்று கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.
கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பஞ்சாப் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி வழங்கும் வகையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, தனியாா் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை மாணவா்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கப்படும் மாணவா்களுக்கான கல்விச் செலவை அரசே வழங்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எவ்வளவு செலவிடப்படுகிறதோ, அந்தத் தொகையை தனியாா் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் தனியாா் பள்ளிகளுக்கு கட்டணம் நிா்ணயிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்படும் செலவுகளை கணக்கில் கொண்டு கட்டணங்கள் நிா்ணயிக்கப்படும் நிலையில், கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சோ்க்கப்படும் மாணவா்களுக்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விச் செலவுத் தொகையை கணக்கிட்டு, குறைந்த கட்டணத்தை வழங்குவது தன்னிச்சையானது. தனியாா் பள்ளிகளுக்கு கட்டண நிா்ணயக் குழு நிா்ணயிக்கும் கட்டணத்தையே, கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டு மாணவா்களுக்கும் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
No comments:
Post a Comment