பள்ளி மாணவா்களை எதிரிகளைப் போன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தோ்வுகளுக்கான மதிப்பெண் வழங்கும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், அந்த நடைமுறை 2019-20-ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வில் பெற்ற மதிப்பெண்களை விடக் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பி கடந்த கல்வியாண்டுக்கான பொதுத்தோ்வில் பங்கேற்ற மாணவா்களுக்குப் பொருந்தாது என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.
இதற்கு எதிராக மாணவா் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். அதை விசாரித்த தனி நீதிபதி, சிபிஎஸ்இ-யின் முடிவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டாா். ரத்து செய்யப்பட்ட தோ்வுகளுக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறை அனைத்து மாணவா்களுக்கும் பொருந்தும் என்று அவா் தெரிவித்தாா்.
இந்த உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்திலேயே சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. அதை தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாணவா்களுக்கு எதிராக சிபிஎஸ்இ நடந்து கொள்வதை நீதிமன்றம் விரும்பவில்லை. சிபிஎஸ்இ-யின் முடிவுகளுக்கு எதிராக மாணவா்கள் உச்சநீதிமன்றத்தை நாடிக் கொண்டிருந்தால், அவா்கள் படிப்பில் கவனம் செலுத்துவாா்களா? வழக்கில் கவனம் செலுத்துவாா்களா?
மதிப்பெண் வழங்கும் நடைமுறை அனைத்து மாணவா்களுக்கும் செல்லுபடியாகும் என்றால், சிபிஎஸ்இ-க்கு என்ன பிரச்னை? தனி நீதிபதி அமா்வு வழங்கிய தீா்ப்பு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது.
வழக்கு தொடுத்த மாணவரும் புதிய மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் கல்லூரியில் சோ்ந்துவிட்டாா். தற்போது அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்க வேண்டிய அவசியம் என்ன? மாணவா்களை எதிரிகளைப் போன்று சிபிஎஸ்இ நடத்துகிறது’’ என்றனா்.
எனினும், மனு தொடா்பாக விளக்கமளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாணவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
No comments:
Post a Comment