உருமாற்றம் பெற்ற கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




23/12/2020

உருமாற்றம் பெற்ற கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு



 உருமாற்றம் பெற்றுப் பரவும் கரோனாவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அறிகுறி இல்லாத மற்றும் குறைவான அறிகுறியுடன் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் கரோனா மையத்தில்தான் சிகிச்சை பெற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தன் வீட்டைத் தகரம் வைத்து அடைத்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கரோனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்தப் பகுதியில் தகரம் அடிக்கப்படுவதன் காரணம் என்ன? எந்த விதியின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பி, தமிழக அரசும், மாநகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று (டிச. 22) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கரோனாவைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு, தமிழக அரசு, மாநகராட்சித் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், தற்போது எந்த வீட்டின் முன்போ, தெருவிலோ தகரம் பொருத்துவதில்லை என்றும், ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசின் அறிக்கையை ஏற்று, அரசுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும், இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு எடுத்து வந்த மனுதாரருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், தற்போது உருமாற்றம் பெற்றுப் பரவும் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மகாராஷ்டிராவில் இரவு நேரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், மோசமான விளைவுகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மிகத் தீவிரமான கண்காணிப்பு மற்றும் திறமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459