கடல் அலையில் சிக்கிய மாணவனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஆசிரியர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/12/2020

கடல் அலையில் சிக்கிய மாணவனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஆசிரியர்

 


மாணவர்களுடன் பழவேற்காடுக்கு வந்த யோகா ஆசிரியர், பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் கடல் அலையில் சிக்கிய மாணவனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் யோகா மையம் நடத்தி வருகிறார். தமது யோகா மையத்தில் பயிலும் 10 மாணவர்களை திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு திருமலை நகர் மீனவ கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்கள் அனைவரும் கடலில் குளிப்பதற்காக கண்ணன் என்பவருடைய படகில் ஏறி அங்கிருந்து முகத்துவாரம் அருகே சென்றிருக்கின்றனர்.


வேலுவின் மாணவர்களில் ஒருவரான நவீன் என்பவர் கடலில் குளிக்கும்போது, அலைகளில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்றும் முயற்சியில் ஆசிரியர் வேலு கடலில் குதித்திருக்கிறார். கடல் அலைகளால் அவர் இழுத்து செல்லப்படுவதைப் பார்த்த படகு உரிமையாளர் கண்ணன், நீரில் மூழ்கிய இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால் அவரால் நவீனை மட்டுமே காப்பாற்ற முடிந்திருக்கிறது.

அவர் மீண்டும் படகில் சென்று வேலுவை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவந்திருக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் வேலு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இது குறித்து திருப்பாலைவனம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். படகு உரிமையாளர் கண்ணனும் ஆபத்தான சூழலில் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459