தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு இணைய வழியில் 13 நாட்கள் பயிற்சி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு இயக்குநரகம், 2 டிஎன் பீரங்கிப்படை கோவை க்ரூப் சார்பில், மாணவர்களுக்கான ஆளுமைத்திறன் மேம்பாடு மற்றும் பணி விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.இதில் கோவை, சென்னை-ஏ, சென்னை-பி, மதுரை, திருச்சி, புதுச்சேரியில் உள்ள க்ரூப்புகளைச் சேர்ந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட 18 மாணவர்கள், 12 மாணவிகள் என 30 பேர் மற்றும் அமராவதி சைனிக் பள்ளி மாணவர்கள் 8 பேர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்குக் கோவை க்ரூப் கமாண்டர் எல்சிஎஸ் நாயுடு தலைமையில், லெப்டினன்ட் கர்னல் கிரீஷ் பார்த்தன் (எஸ்எம்) மேற்பார்வையில், டிஃபென்ஸ் அகாடமி பயிற்றுநர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கர்னல் ஜெயவேலு, கர்னல் ராமகிருஷ்ணன், கர்னல் முரளி ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். டாக்டர் சுரேஷ், இஷா, ஸ்கைலா ஆகியோர் ஆளுமைத்திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து லெப்டினன்ட் கர்னல் கிரீஷ் பார்த்தன் (எஸ்எம்) கூறும்போது, ‘ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய பாதுகாப்புப் படைப் பிரிவுகளில் அதிகாரி நிலையில் வேலைவாய்ப்புப் பெறுபவர்கள் சர்வீஸ் செலக்ஷன் போர்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். இதற்காக இறுதியாண்டு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் இப்பயிற்சி முகாம் கடந்த டிச.7-ம் தேதி தொடங்கப்பட்டு, 19-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
க்ரூப் டெஸ்டிங், ஆளுமைத்திறன் மேம்பாடு மற்றும் நேர்காணல் ஆகிய பிரிவுகளில், நிபுணர்களைக் கொண்டு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி சூப்பர்-30 என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது. தேசிய மாணவர் படைப்பிரிவில் மாணவர்கள் அதிகளவில் சேர வேண்டும். நாட்டுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கம்’ என்றார்.
No comments:
Post a Comment