அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தை மீறி தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்கும் கடலூர் மற்றும் ஈரோடு அரசு கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி சென்னையில் பெற்றோர், மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கைசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்ததுதான் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவக் கல்லூரியும் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் அவற்றிற்கு மாணவர் சேர்க்கையும் 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார
அது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் தற்பொழுது செயல்பட்டு வருகிறது. ஆனால் அக்கல்லூரியின் கல்விக் கட்டணம் ஏற்கெனவே இருந்த அளவிற்கே ரூ 5.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.
சென்ற ஆண்டு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கின் மூலம், பிற தனியார் மருத்துவக் கல்லூரிகளை விடக் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் ரூ 4 லட்சம் என அரசு மாணவர் சேர்க்கை குறிப்பேட்டில் வெளியிட்டது. ஆனால், அதை ரூ 5.44 லட்சமாக அதிகரித்து , 12.11.2020 அன்று அரசு மீண்டும் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாளாக 30.11.2020-ஐ நிர்ணயித்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோல், ஈரோடு மாவட்டம், IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்தி வருகிறது. தற்பொழுது அது, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்படுகிறது. அக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ 3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரிகளையும், ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியையும் அரசே ஏற்ற பிறகு, அவை அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத்தைத்தான், இக்கல்லூரிகளிலும் அரசு வசூல் செய்ய வேண்டும்
அதை விடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலாக கட்டணத்தை வசூல் செய்வது நியாயமல்ல. தமிழக அரசே, வசதி படைத்தோருக்காக, தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும், ஒரு பல் மருத்துவக் கல்லூரியையும் நடத்துவதுபோல் இது உள்ளது. இது சமூக நீதிக்கும்,ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் எதிரானது.என்றார்.
No comments:
Post a Comment