சென்னை,
2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த 18-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு மூலம் மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதில் இருந்த 405 இடங்களில் 399 இடங்கள் நிரம்பின.
அதன் தொடர்ச்சியாக விளையாட்டுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவு ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 21-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த 151 இடங்களில், விளையாட்டுப்பிரிவு, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 19 இடங்கள் முழுவதுமாக நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த 132 இடங்களில், 41 இடங்கள் மட்டுமே நிரம்பின. ஆக 91 இடங்கள் காலியாகின.
பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்கியது. வரும் 30-ம் தேதி தொடங்கும் மருத்துவ கலந்தாய்வு, டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில், கடந்த வாரம் தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. நவ.29 வரை 4 நாள்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த நாட்களில் ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை முதல் (நவ.30) நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment