தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, தென்னிந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (எஸ்ஐஆர்சி) ஆகியவை இணைந்து ஆடிட்டிங் எனப்படும் சிஏ அடிப்படைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சியை அளிக்க உள்ளன.
இது தொடர்பாக எஸ்ஐஆர்சி துணைத் தலைவர் கே.ஜலபதி கூறியதாவது:
''இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் (ஐசிஏஐ) சார்பில் ஆடிட்டர் பணிக்காக சிஏ எனப்படும் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. 2021 மே மாதம் நடைபெறும் சிஏ பவுண்டேசன் தேர்வை எதிர்கொள்ள, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ரூ.9,200 செலுத்த வேண்டும்.
ஐசிஏஐ-ன் போர்ட் ஆஃப் ஸ்டடிஸில் (ICAI-BOS) வரும் ஜனவரி 1-ம் தேதி தேதிக்குள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனைத்துப் பாடநூல்களையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போதே சிஏ அடிப்படைத் தேர்வுக்கும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய பிறகு மே மாதத்தில் வரும் சிஏ அடிப்படைத் தேர்வை எழுத வேண்டும். தேர்வு முடிவு வருவதற்குள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிஏ அடிப்படைத் தேர்வுக்கான பாடத்திட்டத்துக்கு https://eservices.icai.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள், சந்தேகங்களை https://www.icai.org/post/faqs-provisional-admission-to-foundation-course என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
எஸ்ஐஆர்சி துணைத் தலைவர் கே.ஜலபதி
2021-ம் ஆண்டு மே மாதத்தில் சிஏ அடிப்படைத் தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு எஸ்ஐஆர்சி ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தனியார் பள்ளி மாணவர்கள் ரூ.9,500-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் 2021 ஏப்ரல் 10-ம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6.30 மணி முதல் 8.30 வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை என தினமும் 5 மணி நேரம் வகுப்புகள் இருக்கும். பயிற்சி வகுப்புகளுக்கு https://www.sirc-icai.org/view-batches.php என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
இலவசப் பயிற்சி தொடர்பாகக் கூடுதல் விவரங்கள், சந்தேகங்களுக்கு 96771 26011, 82205 22669, 73585 06400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்''.
இவ்வாறு ஜலபதி கூறினார்.
No comments:
Post a Comment