பள்ளி கல்வித்துறை செயலர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/11/2020

பள்ளி கல்வித்துறை செயலர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

 


மாற்று திறனாளி மாணவர்களுக்கு, பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க, பள்ளி கல்வித் துறை செயலர் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளுக்கு, மாற்று திறனாளி மாணவர்கள் தடையின்றி செல்லவும், அவர்களுக்கு சாய்வுதள பாதை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், சமீபத்தில், விசாரணைக்கு வந்தது.


மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'தமிழகத்தில், 26 சதவீத பள்ளிகளில் தான், மாற்று திறனாளி மாணவர்களுக்கு கழிப்பறை வசதிகள் உள்ளன; 63 சதவீத பள்ளிகளில், சாய்வுதள வசதிகள் உள்ளன' என, கூறப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும், சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த, அரசின் ஒப்புதலுக்கு, திட்ட அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 


இதையடுத்து, 'மாற்று திறனாளிகள் உரிமை சட்டத்தை, அரசு கண்டிப்புடன் நிறைவேற்ற வேண்டும். பள்ளிகளில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, காணொலி வாயிலாக துறை செயலர் ஆஜராகி விளக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, டிச., 23க்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459