RTE சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/10/2020

RTE சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு

 



கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான 2019-20 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகையை டிச.14-ம் தேதிக்குள் அரசு வழங்க சென்னை கெடு விதித்துள்ளது. நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20 ஆம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21 ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2018 – 2019 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக ரூ.303.70 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், 2019 – 2020 ஆம் கல்வியாண்டுக்கான நிலுவைத் தொகை விரைவில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை கிடைக்காத தனியார் பள்ளிகள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், பள்ளிகளின் தகுதியைப் பொறுத்து நிலுவைத் தொகை வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, , 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை டிசம்பர் 14-ம் தேதிக்குள் செலுத்த கடைசி வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு செலுத்தாதபட்சத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459