புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை, மீண்டும் ஆலோசனை நடத்த துவங்கியுள்ளது.
தமிழகத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு, அரசியல் கட்சிகள் தரப்பில், முரண்பாடான கருத்துக்கள் நிலவின. இதையடுத்து, 'நிபுணர் குழு அமைத்து, கல்விக் கொள்கை தொடர்பான நிலைப்பாடு எடுக்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.அதன்படி, பள்ளி கல்விக்கு ஒரு கமிட்டியும், உயர் கல்விக்கு மற்றொரு நிபுணர் கமிட்டியும் அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையிலான நிபுணர் குழுவினர், அனைத்து பல்கலைகளின் மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர் பிரதிநிதிகளுடன், 'ஆன்லைன்' வழியாக கருத்து கேட்பு நடத்தி முடித்தனர்.தமிழக அரசின் பரிந்துரை மற்றும் கருத்துக்களை, அக்., 1ல், மத்திய அரசுக்கு உயர் கல்வித் துறை அனுப்பியது.
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, மாநில அரசின் கல்விக் கொள்கைகளில் தலையீடு கூடாது போன்ற முக்கிய அம்சங்கள், அவற்றில் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், தமிழக அரசு அறிக்கை அனுப்பிய, ஒரு மாதம் கழித்து, மீண்டும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனை துவங்கி உள்ளது. இந்த முறை, கல்விக் கொள்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை, மாணவர்களுக்கு விளக்கும் கூட்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழக திறந்தநிலை பல்கலையின் சார்பில், சிறப்பு ஆன்லைன் வழி கூட்டம், இன்று நடக்கிறது. இதில், உயர் கல்வி நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள, முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன் பங்கேற்க உள்ளார்.தமிழக அரசின் சார்பில், திறந்தநிலை பல்கலை துணை வேந்தர் பார்த்தசாரதி, ஒடிசா, உத்தரகண்ட் திறந்தநிலை பல்கலைகளின் துணை வேந்தர்கள், மத்திய அரசின் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை இயக்குனர் உமா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஏற்கனவே, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய பின், இந்த இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நடப்பதால், புதிய கல்விக் கொள்கையில், மத்திய அரசுக்கு ஆதரவாக, தமிழக உயர் கல்வித் துறை புதிய நிலைப்பாடு எடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment