- ,2, 2020,0:01 []சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்களை ரத்து செய்துள்ளது தமிழக அரசு. இதற்கான அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டது. கொரோனா தொற்று குறையாத நிலையில் கிராம சபை கூட்டம் நடத்துவது உகந்ததாக இருக்காது என்பதால் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளது தமிழக அரசு. கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.இதனிடையே கிராம சபை கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவுகளை அவ்வளவு எளிதாக மாற்றமுடியாது. அந்தளவிற்கு மிக வலிமையான ஒரு பலத்தைத்தையும், அதிகாரத்தையும் கொண்டுள்ளது கிராம சபை. கிராமங்கள் தோறும் ஊராட்சி நிர்வாகத்தின் நிதிநிலை பற்றி கிராம சபை கூட்டங்களில் விளக்கப்படும். அது குறித்து பொதுமக்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு கூட்டத்தில் பங்கேற்கும் அந்தந்த ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாக பதில் அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினமான ஜனவரி 26, உழைப்பாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 மற்றும் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆகிய தினங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும். இந்தாண்டு கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மே 1 , ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய மூன்று நாட்கள் நடந்திருக்க வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.இதனிடையே கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு இப்போது திடீரென ரத்து செய்திருப்பது ஏமாற்று வேலை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ரத்து நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment