தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/10/2020

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை



 

சென்னை:

கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகூடங்கள் மூடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் போது பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனால் கொரோனா தொற்று ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வந்ததால் பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் அரையாண்டு தேர்வு நெருங்கும் சூழலில் இன்னும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் இருப்பதால் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிக்கூடங்களை தொடங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வந்தது.

ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம் அமர வைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வகுப்புகளை தொடங்கலாமா? என்றும் அரசு ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவுவது முழுமையாக குறையாததால் பள்ளிகளை திறக்க மத்திய அரசு முழு சம்மதம் தெரிவிக்கவில்லை.

பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தால்தான் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க முடியும் என்று அறிவித்தது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அந்தந்த அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் அடுத்த மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலெக்டர்கள் கூட்டத்தில் பேசும்போது, பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து அரசு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசித்தார். அப்போது தமிழகத்தில் நிலவும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் பள்ளிக்கூடங்களை உடனே திறந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படுமா? என்றும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பக்கத்து மாநிலமான ஆந்திராவில் பள்ளிக்கூடங்களை திறந்த நிலையில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் மீண்டும் அங்கு கொரோனா அதிகரித்து விட்டதை மருத்துவ குழுவினர் சுட்டிக்காட்டினார்கள்.

எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை அரசு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அடுத்த மாதம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு அதன் பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.

மருத்துவ நிபுணர்கள் முழு சம்மதம் தெரிவிக்காததால் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘மருத்துவ நிபுணர்கள் நேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இது தொடரும்.

பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பார் என்றார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459