பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது: புதிய தளர்வுகள் இன்று அறிவிப்பு? - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/10/2020

பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது: புதிய தளர்வுகள் இன்று அறிவிப்பு?

 


தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும், தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடையும் நிலையில் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்படி,புதிய தளர்வுகள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் இன்னும் அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு அறிவித்த ஊரடங்கு 31ம் தேதியுடன் (நாளை மறுதினம்) முடிவடைகிறது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் வருகிற நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


அதேநேரம், பொதுமக்களின் வசதிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய் தொற்று பரவல் குறைந்து கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் பிரதமர், தமிழ்நாட்டை போல் பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என பாராட்டினார். கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரண பணிகளுக்காக இதுவரை அரசு ரூ.7,372 கோடியே 25 லட்சம் செலவு செய்துள்ளது. மருத்துவம் சார்ந்த செலவினம் ரூ.1,983 கோடியும், நிவாரணம் சார்ந்த செலவினம் ரூ.5,389 கோடியும் ஆகும். மருத்துவர்களின் சிறப்பான சேவையால் நோய் தொற்று 7.39 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டு நோய் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.


 கடந்த 17 நாட்களாக ஒவ்வொரு நாளும் நோய் தொற்று எண்ணிக்கை 5 ஆயிரம் நபருக்கும் கீழ் உள்ளது. கடந்த 4 நாட்களாக 3 ஆயிரம் பேருக்கு கீழாக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக குறைந்துள்ளது. 1.53 சதவீதம் இறப்பு மட்டுமே உள்ளது. இறப்பை குறைக்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து திரையரங்குகளை திறக்க கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது. அதுபற்றி மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆட்சி தலைவர்கள் கூறும் கருத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.


கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய அங்காடிகள், காய்கறி மொத்த மார்க்கெட்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினசரி கிருமி நாசினி, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பழக்கடை, மொத்த வியாபாரம், சில்லறை கடைகள் திறக்க கோரிக்கைகள் வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்தும் இன்றைக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் சொல்கின்ற ஆலோசனைகள், மருத்துவ நிபுணர்கள் சொல்கின்ற ஆலோசனைபடி அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்படுத்தப்படும்.


இப்பொழுது தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. சென்னை மாநகரத்தில் தெருக்கள் முழுவதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பலர் முகக்கவசம் அணியாமல் இருக்கிறார்கள். காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்கள் முகக்கவசம் அணியக்கூடிய சூழ்நிலை உருவாகும், நோய் பரவலை தடுக்க முடியும். பருவமழை துவங்குகிற இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் எங்கும் தண்ணீர் தேங்காமல் மாவட்ட நிர்வாகம் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கினால் டெங்கு கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் ஏற்படும். ஆகவே, மாவட்ட நிர்வாகம் விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும். 


கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சில மாவட்டங்களில் திடீரென்று அதிகரித்து விடுகிறது, அப்படி அதிகரித்து விடாமல் மாவட்ட கலெக்டர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 100க்கு மேல் இருக்கிறது. தீபாவளி வருவதற்குள் 100க்கு கீழ் கொண்டுவர வேண்டும். 100க்கு கீழ் இருந்தால் 50க்கு கீழ் குறைக்க வேண்டும். 50க்கு கீழுள்ள மாவட்டங்களில் நோய் கொரோனா இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.


சட்டம், ஒழுங்கை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்கிறார்கள். அதையெல்லாம் கவனமாக கண்காணித்து, மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் நோய் பரவல் தமிழகத்திலே படிப்படியாக குறைய தொடங்கி இருக்கிறது, இது வரவேற்கத்தக்கது. இன்னும் குறுகிய காலத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவல் இல்லை என்ற நிலையை உருவாக்க பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கலெக்டர்களுடனான ஆலோசனை முடிந்த பிறகு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஜெனீவாவில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கலந்து கொண்டார். 


மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியும் சென்னை, தேசிய தொற்று நோய் நிலைய துணை இயக்குனருமான டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பு (தமிழ்நாடு) முதுநிலை மண்டல குழு தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார், ஈரோட்டில் இருந்து இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, வேலூர் சிஎம்சி கல்லூரி இயக்குநர் டாக்டர் ஜெ.வி.பீட்டர், சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் தோணிராஜன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு அளிக்கும் ஆலோசனைகளை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். அதைத்தொடர்ந்து இன்று அல்லது நாளை தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட உள்ள புதிய தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 5 மாதத்திற்கு மேல் திறக்கப்படாமல் உள்ள பள்ளி, கல்லூரிகள் நவம்பர் மாதம் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, பல்வேறு நிபந்தனைகளுடன் நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்படலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459