டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குப்பை விற்பவரின் மகன் அர்விந்த் குமார், 9-வது முறையாக நீட் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிகாரி. இவர் குப்பைகளைச் சேகரிப்போரிடம் இருந்து பொருட்களை வாங்கியும் அவரே குப்பைகளைப் பொறுக்கியும் விற்பனை செய்து வருகிறார். தன்னுடைய பெயராலும் செய்யும் தொழிலாலும் கிராமத்து மக்களிடையே அவமானங்களைச் சந்தித்து வந்தார். இதைக் கண்ட அவரின் மகன் அர்விந்த் குமார், தான் மருத்துவராகி தந்தையின் பெயரை மாற்ற ஆசைப்பட்டார். முதன்முதலாக 2011-ல் அகில இந்திய மருத்துவத் தேர்வு எழுதினார். அதில் அவரால் தேர்ச்சி அடைய முடியவில்லை.
எனினும் தொடர்ந்து தேர்வு எழுத நினைத்தார் அர்விந்த். அதற்கு அவரின் குடும்பமும் உறுதுணையாக இருந்தது. குஷிநகர் மாவட்டத்தில் இருந்து ஜாம்ஷெட்பூர் நகரத்தின் டாட்டா நகருக்கு வேலைக்குப் போனார் பிகாரி. 5-வது வரை மட்டுமே படித்த பிகாரியும் பள்ளிக்கே போகாத தாய் லலிதா தேவியும் அர்விந்தின் கனவு கலையாமல் பார்த்துக் கொண்டனர். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்த அர்விந்துக்குத் தோல்வி மட்டுமே பரிசாகக் கிடைத்தது. இடையில் வந்த நீட் தேர்வு அவரை இன்னும் சோதனைக்கு ஆளாக்கியது. 2018-ல் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்தார் அர்விந்த். மகனின் செலவுகளுக்காகத் தினந்தோறும் 12 முதல் 15 மணி நேரம் வரை உழைத்தார் பிகாரி. செலவுகளைக் குறைத்து 6 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்தார் பிகாரி.
இதுகுறித்து அர்விந்த் கூறும்போது, ”எப்போதும் என்னுடைய எதிர்மறைச் சிந்தனையை நேர்மறையாக்கி அதில் இருந்து ஊக்கம் பெறுவேன். ஒவ்வோராண்டும் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து மதிப்பெண்கள் உயர்ந்தது நம்பிக்கையை ஏற்படுத்தியது. என்னுடைய குடும்பம், தன்னம்பிக்கை, தொடர்ச்சியான கடின உழைப்பு ஆகியவற்றால் இன்று நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளேன். என்னுடைய கிராமத்திலேயே நான்தான் முதன்முதலில் மருத்துவராக உள்ளேன். எலும்புத் துறை சிறப்பு மருத்துவராக வேண்டும் என்பது எனது லட்சியம்” என்று தெரிவித்தார். தேசிய அளவில், 11,603-ம் இடம் பிடித்திருக்கும் அர்விந்த், ஓபிசி பிரிவில் 4,392-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு கோரக்பூர் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment